Wednesday, October 8, 2014

இன்றைய திருஅவை: இறையாட்சியின் இயக்கமா? ஓர் இறையியல் ஆய்வு

முன்னுரை:  வாழ்க்கை சில மனிதனைப் புரட்டிப் போடுகிறது. வேறு சில மனிதர்களுக்கு ஆசிரியத்தைக் கொடுக்கிறது. அப்படிப்பட்ட வேளையில் மனிதன் தேடத் தொடங்குகிறான். அந்தத் தேடலில் பல வகை உணர்வுகள் வருவதும் போவதுமாய் அமைகிறது. அது தனிமனித மாற்றத்தைக் கொண்டு வருகிறது, அது சமூகப் போக்கையும் வரலாற்றையும் மாற்றும் தன்மையைக் கொண்டது. இக்கோணத்தில் திருஅவை ஓர் ஏக்கப் பெருமூச்சில் உருவான இறையாட்சி இயக்கம் தானா? என்று எண்ணத் தோன்றுகிறது. அதுதான் என்னுடைய ஆய்வும் கூட.
முதல் அலகில் இன்றைய மக்கள் இயக்கம், அதன் வகைகள், குணநலன்கள், செயல்பாடுகள், செயல்பாட்டிற்கு இட்டுச் செல்லும் வளங்கள் என்ன என்ன என்பதையும் இரண்டாம் அலகில் வரலாற்றில் இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் பற்றியும் இயேசுவின் இயக்கமும் அதன் செயல்பாடுகள் பற்றிய பார்வையும் தெளிவும் தேடலும். மூன்றாம் அலகில் இன்றைய திருஅவையின் தேவை இறையாட்சி என்ற கண்ணோடத்தில் இயேசுவின் இயக்கமும் திருஅவையும் ஓப்பீடு செய்து திருஅவையின் அவசியம் மாற்று திருஅவை என்பதை வலியுறுத்துவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அலகு ஒன்று
இன்றைய இயக்கமும் அதன் செயல்பாடுகளும்
இந்தியாவில் ஒட்டு மொத்தமாகவும் தமிழகத்தில் சிறப்பாக சமூக மாற்றத்தின் முன்னோடியாகவும் திகழ்வது மக்கள் இயக்கம். மக்கள் இயக்கத்தையும் அதன் செயல்பாடுகளையும் அறிவு ஜீவிகள் யாராலும் புறக்கணிக்க முடியாது. ஜனநாயகப் பாதையில் செல்லும் இயக்கங்களும், புரட்சிகரப் பாதையில் செல்லும் இயக்கங்களும் நடைமுறையில் இருக்கின்ற இரண்டுமே சமூக மாற்றத்தை முன்னிறுத்துவதாக அமைகின்றன.”  எனவே சமூகத்தின் அடிப்படை மாற்றத்திற்கு முக்கியக் காரணியாக இருந்து வரும் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளைப் பற்றிப் பார்ப்போம்
1.1          மக்கள் இயக்கம்:  
மாற்றத்தை அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் படியான கூட்டுச் செயல்பாடே இயக்கம்”  ஆகும். இயக்கம் என்ற சொல்லுக்குச் செயல்பாடு என்ற பதமும் உள்ளது. இயக்கம் பல்வேறு தன்மைகளைக் கொண்டது. ஓவ்வொரு இயக்கத்தையும் அதன் தன்மையின் அடிப்படையில் பிரிக்கலாம். சமூக இயக்கம், அரசியல் இயக்கம், கலைஇயக்கம், இலக்கிய இயக்கம். என்பவையாகும்.
1.2          இயக்கத்தின் அடிப்படை பண்புகள்
இயக்கம் இயக்கத் தன்மையில் இருக்க வேண்டுமென்றால் அதற்கு அடிப்படையான பல பண்புகள் இருக்கின்றன. மனிதனைப் பண்புள்ள மனிதனாக மாற்றுவது அவனுடைய குணநலன்கள் அது போன்று, ஓர் அமைப்பிற்கு அல்லது இயக்கத்திற்கு அடிப்படை பண்பு நலன்கள் தான் இயக்கத்தை வலுப்படுத்துகிறது, வளப்படுத்துகிறது.
1.2.1 பங்கேற்பாளார்கள்
தங்கள் உடைமையும், உழைப்பும், வாழ்வாதாரம் சுரண்டப்படும் போது, தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்பதை உணரும் போது பாதிக்கப்பட்ட மக்கள் நடைமுறையில் உள்ள சமூகப் போக்கை எதிர்த்தும் புதிய மாற்றத்தைத் தேடும் மனிதர்கள் தான் பங்கேற்பாளார்கள். அநீதிக்கு எதிராக, வர்க்கம், சமயம், சாதி போன்ற காரணிகளைத் தாண்டியே தங்களையே ஓர் அமைப்பாக மாற்றிஅதற்கு தங்களுடைய பங்களிப்பை ஏற்படுத்தும் போது சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
1.2.2 அடிப்படை மாற்றம்
இயக்கம் தனக்கென்று ஓர் அடிப்படை மாற்றத்தைக் கொண்டு செயல்பட ஆரம்பிக்கிறது. மனதில் மாற்றத்தை ஏற்படுத்த முதலில் சமூக கட்டமைப்புகளில் மாற்றத்தைக் கொணர வேண்டும். எந்த சமூகம் தங்களுடைய மரபுகளில் மாற்றத்தைக் கொணர்வது அதாவது புதிய வழிமுறைகளை பின்பற்றும் போது வளர்ச்சி அடைகிறது. இயக்கங்கள் மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்குவதற்கு அல்ல மாறாக இயக்கத்தின் அடிப்படை இலக்கு சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சாரத் தளத்தில் கொள்கை அளவில் மதிப்பீடுகள் அடிப்படையில் மாற்றத்தை எற்படுத்து”  ஆகும்.
1.2.3 பிரச்சனைகளை முறைப்படுத்துதல்
மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளுக்கு அடுத்த நிலையில் வகுத்தும், தொகுத்தும் வரையறை செய்யப்பட்டு முறைப்படுத்தப்படுகின்றன. இது சமயப் பிரச்சனைகள், பண்பாட்டுப் பிரச்சனைகள், சமூகப் பிரச்சனைகள் என்று முறைப்படுத்துவது இயக்கத்தின் முக்கியமான பண்புகளில் ஒன்று.
1.2.4 கருத்தியல்
ஒவ்வொரு இயக்கத்திற்கும் கருத்தியல் என்பது முதுகெலும்பு போன்றது. கருத்தியல் இயக்கத்தை உயிரோட்டமுள்ளதாக மாற்றுகிறது. இது தான் இயக்கத்தின் இலட்சிய வேட்கை உருவாகக் கூடிய தளமாக அமைகிறது இலட்சியமாக மாறுகின்றது. எனவே கருத்தியல் எல்லா உறுப்பினர்களையும் ஒன்று சேர்க்க வேண்டும். அவர்களுள் ஈடுபாடடை வளர்க்க வேண்டும். அவர்களின் கூட்டு செயலை நியாயப்படுத்த வேண்டும் அவர்களுக்கு ஒரு தான்மையை வழங்க வேண்டும்.
1.3  இயக்கத்தின் வளங்கள்
இயக்கத்தை உருவாக்கி அதை வளர்த்தெடுக்க உதவும் செயல்பாடுகளே வளங்கள் என்கிறோம். வளங்கள் இயக்கத்தைச் சார்ந்ததாகவும் பிற வெளி உறுப்பினர்களை சார்ந்ததாகவும் அமையும். வளத்தை முறைமையாகப் பயன்படுத்தினால் இயக்கத்தின் செயல்பாடு வேரோட்டமாக அமையும். இவைகள் இயக்கத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரிகின்றன.
1.3.1  தகுதிவாய்ந்த தலைமை உருவாக்குதல்
மாற்றம் வேண்டும், மக்களின் நியாயமான உணர்வுகளுக்கும், விருப்பங்களுக்கம் சொல் வடிவம் கொடுக்க அருள் கொடைத் திறனமைந்த தகுதி வாய்ந்த தலைமை தேவைப்படுகிறது. இத்தகைய தலைமையை உருவாக்கும் போதுதான் மக்களிடையே மாற்றத்திற்கான வேட்கை இயக்க ரீதியாக வடிவமும் வாழ்வும்பெறும். நான் என எண்ணுகிற மனிதர்களையெல்லாம் நாம் எண்ணக் கூடிய அளவுக்கு அதவிருப்தியான மக்களை ஒன்று திரட்ட ஒருங்கிணைந்த தலைவர் தேவை.
1.3.2 பிரச்சாரமும் ஊடகமும்
இயக்கத்தின் கருத்தியல் தொண்டர்களையும் வெகுஜனங்களையும் சென்று அடையுமாறு பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் இயக்கத்திற்குத் தேவைப்படுகிறது. ஊடகங்கள் மக்களுக்கு இயக்கத்தின் இலட்சியத்தைச் சென்றடையச் செய்கிறது. அவர்களின் உணர்வலைகளோடு கலக்கிறது.”  அந்த அளவிற்கு இயக்கத்தை வேரோட்டமானதாகவும் உயிரோட்டமாகவும் மாற்றி விடுகின்றன.
1.3.3 இயக்க கட்டமைப்பு
இலட்சியம் வரையறுக்கப்பட்டதால் மட்டும் இயக்கம் உயிர் பெறாது. அதை நிறைவேற்ற இயக்க கட்டமைப்பு என்பது முக்கியம், செயலாக்க உத்திகள் ஒவ்வொன்றும் இயக்கத்தின் வளங்கள் அது தான் இயக்கத்தை சிறப்பாக, தெளிவாக இருக்கிறதா? என்பதையும், தலைவர், துணை தலைவர். மையகம், கிளையகம் செய்தி பரிமாற்றம் இவ்வியக்கத்தின் மிகப் பெரிய வளம். இதனை உருவாக்குவது இயக்க கட்டமைப்பு
                இவ்வாறு ஆள்வோரால் மறக்கப்பட்ட மக்கள் தேவைகளை சிறப்பாக நினைவுறுத்தி ஆள்வோரின் கவனத்தை அவற்றின் மீது ஈத்து ஒரு வெற்றிடத்தை இயக்கங்கள் நிரப்புகின்றன. மக்களுக்கு நடப்பு நிலையைப் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தி அவர்களை தேடலுக்கு உள்ளாக்குவதும் அவர்களை சமூக ஈடுபாட்டில் உருவாக்குவது”.  தேடலின் மூலம் புதிய சமூகம், வாழ்வு, உறவு போன்றவற்றைக் கொடுப்பதில் முன்மதியோடு இயக்கங்கள் செயல்படுவது. மேலும் இயக்கங்கள் அனைத்தும் பொது நலனில் அக்கறை கொண்டு அன்றாட நடைமுறை வாழ்வில் ஏற்படுகின்ற சிக்கல்களை தணிப்பதற்காக, முடிவுக்கு கொண்டு வருவதற்கு துணை புரியும் கருவியாக இயக்கங்கள் திகழ்கின்றன.
அலகு இரண்டு
இயேசு காலத்து இயக்கமும் அமைப்பும் இயேசு முன்வைத்த இயக்கமும்
இயேசுவின் காலத்தில் பல்வேறு வகையான அமைப்புகளும் இயக்ககளும் செயல்பட்டு வந்தன. இயக்கத்தின் செயல்பாடுகளைப் பார்த்து அவற்றை அன்றாட வாழ்வோடு உரசிப் பார்த்திருப்பார். வரலாற்றில் வாழ்ந்த இயேசுவுக்கு இந்த இயக்கங்கள் தான் உந்து சக்தியாக இருந்திருக்க வேண்டும். இயக்கத்தில் உள்ள நிறை குறைகளைப் பார்த்த இவர் எப்படிப்பட்ட ஒரு இயக்கத்தைத் தான் முன்நிறுத்த வேண்டும் என்ற தேடலும் தெளிவும் பெற்று இருப்பார்.
2.1 இயேசு காலத்து இயக்கமும் அமைப்பும்
இயேசு காலத்தில் காணப்பட்ட இயக்கம் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்த ஒன்றாக அக்கால மக்களை வழிநடத்திய ஒன்றாகும். மக்களைச் சிந்திக்க விடாமல் மழுங்கடித்த செயல்பாடுகளும் நடைபெற்றன. அக்காலத்தில் இயேசு பலவற்றைப் பார்த்தார், ஆய்ந்தார், அறிந்தார், கற்றார் என்பது அவருடைய வாழ்வில் தென்படுகிறது. கீழ் காண்பவை அவர் வாழ்ந்த காலத்தில் செயல்பட்ட பல்வேறு இயக்கங்களும் அமைப்புகளும்.
2.1.1 பரிசேயர்கள்
பரிசேயர்கள்  பகட்டு நிறைந்தவர்கள், பாராட்டப் பெற்றவர்கள். மரபையும், பழமையையும் கட்டிக் காப்பதற்காகச் செயல்படும் ஓர் இயக்கம். இயல்பில்லாதது, இயங்குதன்மை அற்றது, இயந்திர தனமானது.”  அவர்களைக் கேடுக்குள்ளானவர்கள் என இயேசு எச்சரித்தார்.
2.1.2 மறைநூல் வல்லுநர்
சட்டத்தைக் காட்டி மக்களை வாட்டியவர்கள். மக்களுக்குப் புரியாத சட்ட நுணுக்கங்களுக்கு வறட்டு விளக்கம் தந்தவர்கள். நிமிர முடியாதபடி சட்ட சுமைகளை மக்கள் மீது சுமத்தியவர்கள். இயேசு இவர்களையும் கேள்விக்கு உள்ளாக்கினார்.”  குருட்டு வழிகாட்டிகளே எனச் சாடினார் என்று மத்தேயு 23 அதிகாரம் நமக்கு எடுத்துரைக்கின்றது.
2.1.3 குருக்கள்
இவர்கள் மக்கள் வாழ்வைத் தொடாத சடங்கு சம்பிரதாயங்களில் மட்டுமே சுகம் கண்டவர்கள். எதார்த்தங்களை வடிகட்டிய வழிபாட்டைக்காட்டி, மக்களை மழுங்கடிக்கும் மலட்டுச்  சிந்தனைகளை கொண்டவர்கள்.”  மானிட நேயத்தை புறந்தள்ளிவிட்டவர்கள். இயேசு இவர்களையும் புறக்கணித்தார் (லூக்கா10: 25-37).
2.1.4 திருகாட்சியாளர்கள்
கனவுலகத்தைக் காட்டி மக்களைத் திசைத் திருப்பியவர்கள். மேலிருந்து விடிவு வரும் எனப் பக்திப் போதை ஊட்டியவர்கள்.”  வாழ்வின் சூழல்களையும், சிக்கல்களையும் சிந்திக்க விடாமல் பகுத்தறிவை மழுங்கடிக்கும் மயக்க நிலைக்கு இட்டுச் சென்றனர். (மத்தேயு7:15).
2.1.5 தீவிரவாதிகள்
இயேசு காலத்து அப்பாவிகள் மற்றும் அன்றாடங் காய்ச்சிகளை மூளைச்சலவை செய்தவர்கள். பகைமையும் பழி உணர்வுமே அவர்களது மூலதனம். கொலை கொள்ளையே அவர்களின் செயல்பாடு.”  இதுவும் இயேசுவுக்கு ஏற்புடையதல்ல.
2.1.6 திருமுழுக்காரின் இயக்கம்
இயேசுவுக்கு இதில் ஈடுபாடு உண்டு. சமய, பொருளாதார, பண்பாட்டு மாற்றம் தேவை எனும் திருமுழுக்காரின் அர்பணத்தை அப்படியே ஏற்கின்றர்கள். அதை அடித்தளமாகக் கொண்டு தனது கோட்பாடுகளைக் கட்டியெழுப்புகிறார்கள். ஆனால் திருமுழுக்காரின் அழிவு, தண்டனை, சுளகு, கோடரி, நெருப்புப் போன்ற சொல்லாடல்கள் மூலம் அச்சத்தை ஊட்டி மக்களை மனந்திரும்ப வைத்தனர்.
2.2 இயேசு முன்வைத்த இயக்கமும் அமைப்பும்
இயேசு முன் வைத்த இயக்கங்கள் தனி மனிதரைச் சார்ந்தது அல்ல மறாக சமூகத்தை சார்ந்தது. இயேசு காண விரும்பிய அமைப்பு முழு விடுதலைக்கான அமைப்பு. சமூக, பொருளாதார, அரசியல் விடுதலை மட்டுமல்ல, அக விடுதலை மற்றும் ஒடுக்கப்படுவோரும் விடுதலையை வழங்கக் கூடிய அமைப்பையும் இயக்கத்தையும் முன்வைத்தார். அவற்றின் செயல்பாடுகளைப் பார்போம்.
2.2.1 சமூக விடுதலை
இயேசு வாழ்ந்த காலத்தில் யூத சமயத்தில் பல்வேறு பிளவுகள் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. பணக்காரன், சட்டம் தெரிந்தவன் உயர்வாகக் கருதப்பட்டனர். நோயாளிகள், வரி வசூலிப்பவர், விலைமாதர் என்று பலதரப்பட்ட மக்கள் வாழ்ந்து வந்தனர். இவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்ட மானிடர்களை இயேசு தம் நண்பராக்கிக் கொண்டார். இதனால் சமூக ஏற்பும் மரியாதையும் பெறுகிறார்கள். அவரது ஒதுக்கப்பட்ட நிலையிலிருந்து விடுதலை கிடைக்கிறது. மானிடரை பிரிக்கின்ற வறையறைகளைக் கொண்டு செயல்படுகின்ற அனைத்தையும் எதிர்த்தார். அவர்களின் வாழ்விலும் விடுதலைய உதயமாகச் செய்கிறார்.
2.2.2 சமய விடுதலை
இயேசுவின் காலத்தில் இருந்த சமய இயக்கங்கள் மக்களிடையே மூடபழக்க வழக்கங்களையும், மக்களின் சிந்தனைகளையும் மழுங்கடிப்பதாக அமைந்தது. எனவே அக்கால சமய சடங்குகள் அர்த்தமற்றதாய் இருந்தன. மக்களின் வாழ்வோடு தொடர்புடைய ஒன்றாக அமையவில்லை. அவர்களுடைய பலி முறைகளும் கடவுளுக்கு உகந்ததாக இல்லை. எனவே தான் இயேசு அவற்றை எதிர்த்தார்.”  மானுட நேயத்திற்கு எதிராக ஓய்வு நாள் சட்டம் இருந்தால் அதையும் மீறியவர். குணப்படுத்தினார் மக்களுக்கு அன்பு என்னும் விடுதலை தரும் சட்டத்தைக் கொடுத்தார்.
2.2.3 பொருளாதார விடுதலை
பொருளாதார விடுதலையே இயேசு முன்வைத்த இயக்கத்தின் கனவாக இருந்தது. பகிர்தலே இவற்றின் அடிப்படை தாரக மந்திரமாக அமைந்தது. பகிர்தலை இயக்கத்தில் வாழ்க்கை முறையாக்கினார். மனித உழைப்பிற்குக் கொடுக்க வேண்டிய கூலி திறமை அடிப்படையில் அல்ல, மாறாக தேவை அடிப்படையில் என்பதை உணர்த்தினார். மனித மாண்பை உருவாக்க கூடிய பொருளாதார விடுதலைக் கூறுகளைத் தன்னுடைய செயல்பாட்டில் வாழ்ந்து காட்டியவர்.
2.2.4 அரசியல் விடுதலை
இயேசுவின் காலத்தில் பல்வேறு ஆட்சிகள் நடைபெற்றன. மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்குக் குரல் கொடுத்தார். இயேசு ஒரு போதும் அவர்களுடன் சமரச பேச்சு நடத்தவில்லை. அடிமைநிலை, அடக்குமுறை, ஆதிக்க மனநிலை ஆகியவற்றை மூச்சோடு எதிர்த்தார். மனிதநேய உரிமைக்காக புரட்சிகரமான செயல்பாட்டில் மனித மாண்பை தூக்கிப் பிடித்தார்.”  இதுதான் உண்மையான உள்ளார்ந்த அரசியல் விடுதலைக்கான உளப்பாங்கு.
2.2.5 அக விடுதலை
அக விடுதலை என்பது  அவநம்பிக்கையிலிருந்து விடுதலை அளிப்பது. இயேசு பல்வேறு தீய ஆவி பிடித்திருந்தவர்களை குணப்படுத்தினார், உள்மன காயங்களை ஆற்றினார். பல்வேறு பாதிப்புக்கு உள்ளான மனிதன் நிம்மதி இல்லாமல் தவிக்கின்ற போதும், “தாழ்வு மனப்பான்மையால் வருந்துகின்றவர்களோடு உரையாடியும், உறவாடி சமபந்தி விருந்துண்டும் அவர்களின் கவலை அச்ச உணர்வுகளிலிருந்து விடுதலை பெற இயேசு தூண்டுதலாக இருந்தார்.
                எனவே, இயேசுவின் காலத்து இயக்கங்கள் பழமை விருப்பிகளாகவும், மக்களின் சிந்தனையை மழுங்கடித்து அர்த்தமற்ற வழிபாடு கொண்டாடுவதாகவும் அமைந்தன. இயேசு காண விரும்பிய இயக்கங்கள் புரட்சிகரமான முன்னெடுப்புகளை மேற்கொண்டு சமூகம் மட்டுமல்ல மனித வாழ்வில் மாற்றம் கொண்டுவருவதே இயேசுவின் இயக்கம்.
அலகு மூன்று
இன்றைய திருஅவையின் தேவை: இறையாட்சி இயக்கம்
இன்று திருஅவை பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்தாலும் கூட பல்வேறு வகையான முரண்பாடுகளும், சவால்களும் நிறைந்து காணப்படுகின்றன. திருஅவை பல்வேறு வளர்ச்சியைக் கண்டாலும் தளர்ச்சியும் சவாலும் நிறைந்த பணியாக தான் இருக்கிறது. இன்று திரு அவை சந்திக்கும் சவால்கள் என்ன என்பதை ஆய்வு செய்வோம்.
3.1 திருஅவையின் தளர்சியும் அதன் செயல்பாடும்
3.1.1 சாதிய உணர்வு
தாழ்ந்த சமுதாயத்தின் அத்தனைச் சீர்கேடும் திருச்சபையில் இருக்கும் போது சமுதாயத்தை செப்பனிட முடியுமா? சாத்தியமா? என்று கேட்டால் இல்லை என்ற பதில்தான் மிஞ்சுகிறது. அருட்பணியாளர்கள் மத்தியில் சாதிய மேகம் தலை விரித்து ஆடுகிறது. அவர்களை ஒருங்கிணைப்பதே பெரும் சவாலாக இருக்கின்றது. எப்பொழுது மக்களிடையே எழும் சாதிய மோதல்களை எப்படி திருஅவை முன்னெடுத்துச் செல்லும் என்பது கேள்வியாகவே இருக்கிறது.சாதிய அமைப்புகள் இருப்பது போல அருட்பணியாளரும் சாதிய உணர்வோடு ஆயருக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடுவதை நாம் பார்க்கின்றோம். சாதியத்தின் இரும்புப் பிடிக்குள் குருத்துவம் சிக்கித் தவிக்கின்றது. தமிழக திருஅவை நடைமுறை வாழ்வில் சாதியத் தாக்கம் கொண்ட குருத்துவம் வலம் வருகின்றது.
3.1.2 நிறுவன திருஅவை 
திருஅவை கிறித்தவ நிறுவனமாக தான் இருந்து வருகின்றது. திருஅவை தன்னுடைய கொள்கையைத் தக்க வைத்துக் கொள்ள முயற்ச்சிக்கின்றது. திருஅவை தன்னில் மாற்றத்தை ஏற்படுத்த முயலவில்லை. மாறாக, அதன் மரபில் செயல்பட விரும்பி செயல்பாடுகளை உருவாக்குகிறது. முக்களின் வாழ்வுக்குக் காட்டுவதற்குப் பதிலாக தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சிக்கிறது.
3.1.3 இறை அனுபவம்
 கிறித்தவ வழிபாட்டு செயல்கள் பல நேரங்களில் பயன் தரவில்லை. அர்த்தம் தர வில்லை, ஆழ்ந்த இறை நம்பிக்கைக்கு அழைத்து செல்ல வில்லை. இங்கு செயல்பாடற்ற நம்பிக்கை உயிரற்றது என்று யாக்கோபு கூறியது போல இன்று குருக்கள் மத்தியில் இறை அனுபவம் என்பதை கேள்விக்கு உட்படுத்த வேண்டும்.”  இறைமக்களுக்கு தேவையான இறைஅனுபவத்தை கொடுக்க மறுக்கின்றார்கள். தன் கடமையை சரிவர செய்வதில்லை. இதனால் பல மக்கள்  திருஅவையை விட்டு வெளியேறும் தன்மையை திருஅவை உருவாக்குகிறது.
3.1.4 மருத்துவ பணிகள்
உடலிலும் உள்ளத்திலும் மட்டுமல்ல சமூகத்திலும் நலவாழ்வு சிறக்க வேண்டுமென்பதே இயேசுவின் மருத்துவப் பணி.  ஆனால் இயேசுவின் மருத்துவப் பணியைப் போன்று நிறைவுள்ளதாக இன்றைய திருஅவையின் மருத்துவப் பணிகள் இல்லை. திருஅவையின் மூலம் வழிநடத்தப்படுகின்ற மருந்துவமனைகள் பணம் தான் முக்கியம் என்ற தன்மையில் செயல்படுகின்றன. பிறரன்பு என்பது கேள்விக்கு உட்படுத்தும் நிலையை உருவாக்கி உள்ளது.
3.1.5 கல்விப் பணி
                நமது கல்வி நிறுவனங்களில் சிறப்பாக பயன்பெறுவது ஏழை மக்கள் அல்ல என்பதை ஏற்றுக் கொள்ள தான் வேண்டும். இந்தியாவில் உயர்மட்டத்திலிருக்கும் பணக்காரன், அரசு அதிகாரிகள் பிள்ளைகள் 99 சதவீதம் நமது கல்வி நிறுவனங்களில் தான் படிக்கிறார்கள். கல்விப் பணி கடவுள் பணி என்ற எண்ணம் வந்தகாலம் போய் பணம் தான் தெய்வம் என்றுச் சொல்லும் அளவிற்கு நமது கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.
3.2 திருஅவையின் கடமைகள்
                ஆவியரால் நிரப்பப்பட்டு, வழிநடத்தப்படும் திருச்சபை செபம், வழிபாடு, தியானத்திலே மட்டும் ஆழ்ந்திருப்பது போதாது. ஆவியாரால் உந்தப்பட்டு, இன்றைய உலகில் உள்ள கடமைகள் என்ன, எப்படிச் செயலாற்ற வேண்டும் என்று உணர்ந்து ஆக்க வழிகளில் இறங்க வேண்டும். செயலற்ற செபம், செயலற்ற விசுவாசம் பலனற்றது. எனவே கிறிஸ்துவினுடைய பணியைச் சிறந்த முறையில் செயலாற்ற வேண்டும் என்பதை அறிய வேண்டும்.
3.2.1 விடுதலை
                யோர்தான் ஆற்றில் திருமுழுக்கின்போது ஆவியாரைப் பெற்றபின் கிறிஸ்துவின் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. அவர் தமது பணியை லூக் 4:18-19-ல் எடுத்துரைக்கிறார். அவர் அளித்த தூய ஆவியார் இன்று திருச்சபையை வழிநடத்துகிறார் என்றால், எப்படித் திருச்சபையானது இன்றைய உலகின் ஏற்றத் தாழ்வுகளையும் அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் பார்த்துக்கொண்டு செயலில் இறங்காமல் இருக்க முடியும்? ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டு, அவரால் வழி நடத்தப்படும் ஒவ்வொருவரும் இதற்கு எதிராகக் கிளர்ச்சிசெய்ய வேண்டாமா? “திருஅவை தனி நபரையோ அல்லது ஒரு குழுவையோ புனிதமாக்குவதோடு மட்டும் நிற்கக் கூடாது. அன்று இயேசுவை ஆவியார் இட்டுச் சென்றது போல் ஒவ்வொருவரும் சமூகத்தின் தீமைகளை எதிர்த்துப் போராட வேண்டும்.
3.2.2 பல்சமய உரையாடல்  
                நம்மில் குடிகொண்டிருக்கும் ஆவியாரை அறிவதோடு மட்டும் இந்த திருஅவை நின்றுவிடக்கூடாது. மற்ற மறைகளிலும் உண்மைகள் உள்ளன. மற்ற மறையினர் வாயிலாகவும் அவர் பேசலாம். அவர்களுடன் உறவு கொண்டு, உரையாடி, அவர்கள் மூலமாக இயேசு என்ன பேசுகின்றார் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். ஏனெனில், “மற்றவர்களைப் பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கும், ஆன்மீக வாழ்வில் மலர்ச்சி அடையவும், சகோதர அன்பில் நிலைத்துச் செயலில் இறங்கவும்”  இத்தகைய உரையாடல்கள் நமக்கும் பெரிதும் உதவுகின்றன. என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும.
3.2.3 நற்செய்தி அறிவிப்புப்பணி
                “நற்செய்தி அறிவுப்பணி சிறந்த முறையில் நடைபெற திருஅவை முதுகெலும்பு போலச் செயல்படவேண்டும். கிறிஸ்துவ மறைபரப்புப் பணியின் ஆரம்பம், வளர்ச்சி முடிவு அனைத்துமே ஆவியாரின் செயல்தான். ஆகவே இது திருஅவையின் முக்கிய கடமையாகும்.”  ஆழமான உயிருள்ள நம்பிக்கை எங்குள்ளதோ அங்கு செப வாழ்வு மலரும், அன்பு தழைக்கும், அருள் பெருகும். எனவே நம் நம்பிக்கை வாழ்வை, நம் அருள் வாழ்வை, நம் அன்பு வாழ்வை, வலுப்படுத்த உதவும் அரிய கருவி என்பதை உணர்ந்து செயல்பட்டால் அது நிறைவு தரும்.
3.2.4 மனமாற்றம்
                கிறிஸ்துவை ஆண்டவராகவும், மீட்பராகவும் ஏற்றுக் கொள்பவர் மன மாற்றத்திற்கு, புதிய மாற்றங்களுக்கு அழைக்கப்படுகிறார். தம் வாழ்வை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டியவராகிறார். எனவே கிறிஸ்து நம் வாழ்வின் மையமாகிறார். அவரது செயல்கள் நம்மை வழி நடத்துகின்றன. கிறிஸ்துவுக்கு நம்மை முழுமையாக அர்ப்பணித்து வாழும்பொழுது ஏற்படும் உறவு ஆவியாரில் புதிய வாழ்வை அளிக்கிறது. இப்புதுவாழ்வு கிறிஸ்தவனின் அனுபவப் பொருளாக மாறுவதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
3.2.5 கிறிஸ்து மைய வாழ்வு
                திருஅவை கிறிஸ்துவை மையமாகக் கொண்டது. இனி வாழ்பவன் நானல்ல. கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்” (கலா 2:20) என்று புனித பவுல் கூறுவதைப் போல நாமும் கூறக்கூடிய நிலை தான் ஆன்மீக மறுமலர்ச்சி. கிறிஸ்துவைத் தன் வாழ்வின் மையமாகக் கொண்டு வாழ்ந்ததால்தான் ஆதித் திருச்சபையில் தங்கள் உயிரையும் பணயம் வைத்தார்கள், கிறிஸ்துவின் சாட்சிகளாக மடிந்தார்கள்.”  இன்று நாமும் இவர்களைப் பின்தொடர வேண்டும். நம்மையே மையமாகக் கொண்ட வாழ்வு மாற வேண்டும். இயேசுவின் இறையாட்சி விழுமியங்களை மையமாகக் கொண்ட வாழ்வு நம்மில் மலர உழைக்க வேண்டிய பொறுப்பு உண்டு.
3.3 அருட்பணியாளர் கடமைகள்
கத்தோலிக்க திருச்சபையின் அடித்தள அமைப்பு பங்கு என்பதாகும். இது தொடக்க காலத் திருச்சபையில் நிலவிய தோழமை அல்லது ஒன்றித்த கிறிஸ்தவ சமூகத்தை அடிப்படை நோக்கமாகக் கொண்டது. ஆனால் இப்போது இந்தப் பங்கு அமைப்பு சீரிய முறையில் செயல்படுவதில்லை எனலாம்.
                “கத்தோலிக்க சமூகத்தில் தோழமை, நட்புறவு, ஒற்றுமை போன்றவற்றை ஏற்படுத்தும் செயல்களில் திருச்சபை கவனம் செலுத்த வேண்டும். அதன் விளைவாக உறுப்பினர்களிடையே வாழ்க்கையில் முன்னேற்றமும், நம்பிக்கையும், நட்புறவும், ஒருமைப்பாடும் ஏற்பட வேண்டும்.”  கத்தோலிக்கர் அனைவரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையான தோழமையை ஏற்படுத்தும் செயல்களில் கவனம் செலுத்த வேண்டும்.
                இதை நோக்காகக் கொண்டு, உலகின் பல பகுதிகளில் சிறு கிறிஸ்தவச் சமூகங்கள், அடித்தளக் கிறிஸ்தவச் சமூகங்கள், அருகருகிலான திருச்சபைச் சமூகங்கள், அன்பியங்கள் போன்ற பல பெயர்களுடன் அமைப்புகள் தோன்றியுள்ளன. இவற்றில் பல இங்கிருந்து ஒருவரும் அங்கிருந்து ஒருவருமாக வந்து பங்கு பெறும் அமைப்புகளாக விளங்குகின்றன. எனவே கூட்டம் முடிந்தபின், விரும்பிய தோழமை நிலைத்திருப்பதில்லை. ஆகவே பங்குகள் தெருவாரியாகவோ பரப்பளவு வாரியாகவோ பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கத்தோலிக்கர்கள் கூடிச்செபிக்கவும், ஒருவரை மற்றவர் அறிந்து கொள்ளவும், கருத்துகளையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளவும், உதவி செய்யவும், இவற்றின் விளைவாக உண்மையான தோழமையை வளர்க்கும் விதத்தில் குழுக்களாக அமைக்கப்பட வேண்டும். இக்குழுக்களின் உறுப்பினர்கள் அவ்வப்போது கூடி இறைவார்த்தையையும் அதற்குரிய விளக்கம் கேட்டலிலும், இறைவேண்டலிலும் அப்பம் பிடுவதிலும் உயிருள்ள விதத்தில் பங்கெடுத்துத் தங்களுள் உறையும் இறை ஆவியின் பிரசன்னத்தை அனுபவபூர்வமாக உணர முயற்சி எடுக்க வேண்டும். இக்குழுக்கள் வெறும் சமயக்குழுக்களாக மட்டும் செயல்படாமல், சமூக வளர்ச்சிக் குழுக்களாகவும் அமைய வேண்டும். தங்கள் பகுதியில் எழும் நிகழ்ச்சிகளையும் பிரச்சனைகளையும் பற்றிய கருத்துப்பரிமாற்றமும், அவற்றைச் சீர்ப்படுத்தும் கூட்டு முயற்சியும் இடம்பெற வேண்டும். பொருள் வளமுடையோர் வறியவர்களுக்கு உதவி செய்யவும், முடிந்தவர்கள் பிறர் தேவைகளில் உதவிசெய்வும் இக்குழுக்கள் வழிகாட்ட வேண்டும். அதன் விளைவாகப் பொருளாதாரம் சாதி போன்ற வேறுபாடுகளையும் கடந்து ஒருமனத்தோராய் இருக்க இக்குழுக்கள் முயல வேண்டும். அப்போதுதான் கத்தோலிக்கரிடையே தனிமை, ஒதுக்கப்படுதல் போன்ற நிலைமாறி, பிறரை நன்கு அறிந்து, உண்மையான நட்புறவிலும் தோழமையிலும் ஒன்றித்து வாழ வழி பிறக்கும்.
அலகு நான்கு
இறையாட்சி இயக்கத்திற்கான பரிந்துரைகள்
4.1 அருட்பணியாளர்களின் பணிகள்
 கத்தோலிக்க அருட்பணியாளர்களின் பணியானது விளிம்பு நிலை மக்களைத் தேடிச் சென்று மீட்பளிக்க வேண்டிய பணியாக உள்ளது.
 இயேசுவின் முக்கிய பணியானது அங்குள்ள மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களோடு பந்தியில் அமர்ந்து அவர்களின் தேவையை நிறைவேற்றுவது. அது போன்று அருட்பணியாளர்கள் கூட்டத்திற்கு வந்து செபிப்பதைவிட இல்லங்களுக்குச் சென்று செபித்தல் மிக முக்கியமான ஒன்று. குடும்ப செபத்திலும், இல்லங்களை சந்திப்பதிலும், உறவுகளை வளர்த்துக் கொள்வதிலும் தூய ஆவியானவர் நம் அனைவரையும் வழிநடத்துகிறார் என்ற உணர்வை வளர்த்தெடுக்க வேண்டும்.”
 பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருத்தாலும் ஆண்களின் ஆதிக்கமும் அதிகமாக இருக்கிறது. மேலும் சாதிய உணர்வுகளைத் தாண்டி கடவுள் முன்னிலையில் அனைவரும் சமம் என்ற உணர்வை வளர்க்க வேண்டும். இயேசு சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முயற்சி எடுத்தார். அதேபோல் சமத்துவ சமுதாயம் நிலைநாட்ட முயற்சிகள் எடுக்க வேண்டும்.
“இறையாட்சி விழுமியங்களை உள்வாங்கி செயல்படுத்த வேண்டும். கத்தோலிக்க திருஅவையில் உள்ள திருமுழுக்குப் பெற்ற அனைவரும் செய்ய வேண்டிய அடிப்படை கடமையாக வாழ்வில் கொள்ள வேண்டும்.”  அதற்கான பயிற்சிகளைக் குழந்தைகளுக்கு மறைக்கல்வி வழியாகவும் இளையோருக்கு இளையோர் பாசறை வழியாகவும், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அன்பியத்தின் வழியாகவும் கற்றுக் கொடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் திருஅவைக்கு உண்டு.
 பணிப் பகிர்வு தேவை என்பதை மனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
  இறை அனுபவத்துடன் செயல்பட்டால் தான் இறையரசுப் பணியை இம் மண்ணில் நிலைநாட்ட முடியும். இவ்வாறு செயல்படும்போது ஆழமான விசுவாசம் உண்டாகும்.
அனைவரும் விவிலியம் அறிவோம் என்ற திட்டத்தின் கீழ் அனைவருக்கும் விவிலிய வகுப்புகள் எடுக்கும்போது இறைமக்களிடம் உள்ள இறைவார்த்தையின் மீதுள்ள தாகம் அதிகரிக்கும். இதைத்தான் இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுகிறது, “காலத்தின் அறிகுறிகளைத் தேர்ந்து தெளிந்து நற்செய்தியின் ஒளியில் அவற்றின் பொருளை எல்லாக் காலக்கட்டங்களிலும் விளக்கி உரைப்பது திருச்சபையின் கடமையாகும்.
அன்பியத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில் அன்பிய விழா மூலம் அன்பியத்தில் உள்ள குடும்பங்களை அன்புறவில் வலுப்படுத்த வேண்டும்.
 செபக்குழுவை அமைத்து பங்குகளில் உள்ள எல்லா வீட்டிற்கும் சென்று செபிக்கத் தூண்டுதல். மேலும் ஆலயத்தில் எல்லாரும் ஒன்றாக, ஒரே குடும்பமாக செபிக்க ஏற்ற தளத்தை ஏற்படுத்துதல்.
நோயாளிகளைச் சந்தித்தல், தேவையில் இருப்போருக்கு உதவுதல் போன்ற உதவியைச் செய்யும்போது இறையரசைக் கட்டியெழுப்பும் கருவியாக அனைத்துச் சபைகளும் செயல்படும். இவ்வாறு நமது குருத்துவம், அமைப்பு முறைகள், வழிபாடுகள், இறையியல் மேய்ப்புப்பணி முதலியவற்றை மறுவரையறை செய்வதே முதல் கட்டப்பணியாக இருக்க வேண்டும்.
4.2 அருட்பணியாளர்களின் முன்னெடுப்புகள்
அன்பியம் உருவாக்குதல்: பயிற்சி அளித்தல், தொடர் வழிகாட்டி நியமித்தல்.
சிறார் பாராளுமன்றம, சிறுவழி இயக்கம், பாலர்சபை, இளைஞர் இயக்கம் முறைப்படுத்தி செயல்படுத்த வேண்டும்.
மக்கள் வங்கி நடைமுறைப் படுத்துதல் (பங்குவங்கி உருவாக்கி நடத்தப்பட வேண்டும்.)
பங்களவில் மாதாந்திர இதழ் உருவாக்குதல்
தொட்டில் குழந்தைத் திட்டம் (ஊரில் உள்ள வசதி குறைந்த குழந்தைகளைக் கட்டி எழுப்புவது)
தன்னிறைவுத் திட்டம் (ஊர் திருவிழாவின் போது குறிப்பிட்ட வருவாயை ஊர் நலனுக்காக பயன்படுத்தவது).
வேலைவாய்ப்புச் செய்திகளைக் கண்டறிந்து மக்களுக்கு உதவுதல்.
மாணவர்களுக்கும, இளைஞர்களுக்கும் வாழ்க்கை வழிகாட்டல் பயிற்சி கொடுத்தல்
மக்களின் பங்கெடுப்பு அதிகமாக்கப்பட வேண்டும். மக்களை பயன்படுத்தி செயல் திட்டம் தீட்டுதல்
சபைகள், இயக்கம் மற்றும் ஊரில் உள்ள அனைத்து அமைப்புகளிலும் குறுகிய மற்றும் நீண்ட ஆண்டு திட்டம் உருவாக்க வேண்டும்.
முடிவுரை
முறையோடு உழைத்துண்ண முடியாத சோம்போறி
நரி போலத் திரிவார் புவி மேலே நல்ல
வழியோடு போகின்ற வாய்பேசா
உயிர்களை வதச்சு வதச்சு தின்பார் வெறியாலே பட்டுக் கோட்டையார்
ஒரு சமூகத்தை விமர்சனப் பார்வையோடு அலசுவதும் எதிர் நீச்சல் போடுவதும் தோழமை உணர்வை வளர்ப்பதும் போன்ற பண்புகளைக் கொண்ட ஒரு சமூகம் உருவாக வேண்டும். ஆதிக்கத்திற்கு எதிரான சமத்துவம், மனித நேயம், நீதி  இவற்றின் அடிப்டையில் செயல்படத் தூண்டி சமூக மாற்றத்தையும் நேர் மறையான சிந்தனைகளையும் விதைக்க வேண்டும். சமூகத்தில் புரட்சி ஏற்பட வேண்டும். புதிய சமூகத்தை உருவாக்குவது நமது சமூகப் பொறுப்பு என்பதை ஏற்க வேண்டும். சமுதாய மாற்றுச் செயல்பாட்டாளர்களாக வாழ வேண்டியது நமது சமூக கடமை என உணர்ந்து செயல்பட வேண்டும்
பொய்மைக்கும் புரட்டுக்கும், மௌன சாட்சிகளாக இருப்பதை விட புதுமைக்கும் புரட்சிக்கும் இரத்த சாட்சிகளாக  மாறுவோம் - தந்தை பெரியார்.

துணை நின்ற நூல்கள்
புத்தகம்
1. மரியஅருள். புதுயுகம் புதுஇனம். சென்னை: இதயவெளியீடு, 1985.
2.க்ரியா. தற்கால தமிழ் அகராதி. சென்னை: இந்திய அரசு கல்வித்துறை,1992.
3.இன்றைய உலகில் திருச்சபை, இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள், தொகுப்பு. பவுல் லியோன் (திருச்சி: தேடல் வெளியீடு, 2008), எண். 4.
4.மரிய அருள் ராஜா. திருச்சபையும் தலித் மக்களும். சென்னை: அமைதி வெளியீடு, 2010. 159
5.மிக்கேல். விடுதலை விழிப்புகள். திருச்சி: தமிழக சமூக பணி மையம்,1999.

கட்டுரைகள்
6.பிரேமா வாக்கயில். பவுலின் பர்வையில் பல்சமய-சபை உரையாடல். இரண்டாயிரத்தில் பவுல். தொகுப்பு. ரெய்மண்ட் ஜோசப். திருச்சி: தேடல் வெளியீடு, 2009.
7.பீட்டர். திருநிலைக் குருத்துவத்தின் கூறுகள். இறையாட்சி இறையாட்சி. தொகுப்பு. செல்வராசு. திண்டுகல்: வைகறைப் பதிப்பகம், 2005.
8.செபஸ்தியான். மக்கள் இயக்கங்களை வளர்தெடுக்க உதவும் வளங்கள். எழுச்சி பெறும் மக்கள் சக்தி. தொகுப்பு. செல்வராசு . திருச்சி: தேடல் வெளியீடு, 2013.
9.எரோணிமுஸ். இயேசுவின் ஆன்மிகம். பாறையை பிளக்கும் வேர்கள். தொகுப்பு. செல்வராசு . திருச்சி: தேடல் வெளியீடு, 1996.
10. அமலதாஸ். விடுதலைவாழ்வு. மறைஅருவி 3/2 (1979), 39-50
11.எரோணிமுஸ்,“இயேசுவும் அவர் காலத்து தீவிரவாதிகளும்”,மறைஅருவி 6/4 (1982), 1-9
12.மரிய அருள் ராஜா,அருட்பணியை அகழ்ந்து ஆராயும் மக்கள் மைய நிதானம், பெந்தக்கோஸ்தே இயக்கங்கள். தொகுப்பு., நசரேன் (சென்னை: இதய வெளியீடுகள் 11, 2007), 127.
13.லியோன் தர்மராஜ். மறைமாவட்ட அருட்பணியாளரின் ஆன்மிகம். இறையாட்சி இறையாட்சி.  தொகுப்பு., செல்வராசு (திண்டுகல்: வைகறைப் பதிப்பகம், 2005), 172
14.சுந்தரி மைந்தன், திருஅவை-ஓர் இயேசு இயக்கம். பெந்தக்கோஸ்தே இயக்கங்கள். தொகுப்பு. நசரேயன் (சென்னை: இதய வெளியீடுகள் 11,2007), 109
15. ஆரோக்கியதாசு. தலித் இயக்கங்கள்: ஓர் அலசல்”,அன்னம், 9/3 (1996), 15


0 comments:

Post a Comment